தலைவாசல் அருகே துணிகரம்: வீடு புகுந்து 2 பெண்களிடம் 8½ பவுன் நகை திருட்டு-இரவில் டவுசர் கொள்ளையர்கள் கைவரிசை

தலைவாசல் அருகே இரவில் வீடு புகுந்து 2 பெண்களிடம் 8½ பவுன் நகையை டவுசர் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

Update: 2022-11-30 22:32 GMT

தலைவாசல்:

பால்காரர்

தலைவாசல் எழில்நகரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 80). பால்காரர். இவருடைய மனைவி கமலம் (70). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டின் கதவில் இருந்த உள்புற தாழ்பாளை திறந்த மர்மநபர், நைசாக வீட்டுக்குள் நுழைந்து கமலம் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்தார். அப்போது திடுக்கிட்டு விழித்த அவர், தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். மர்மநபர் இழுத்ததில் தாலி மட்டும் கமலம் கையிலும், மீதி 6 பவுன் தங்க சங்கிலி மர்மநபர் கையிலும் சிக்கி உள்ளது.

நகை பறிப்பு

உடனே மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி சென்றார். கமலம் அலறல் சத்தம் கேட்டு ரங்கசாமி விழித்தார். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பக்கத்து வீடுகளில் இருந்து யாரும் வெளியே வந்து விடக்கூடாது என அந்த வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் இன்றும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் ஒரு வீடு

இதற்கிடையே அந்த நபர் மேலும் ஒரு வீட்டிலும் இதேபோல் கைவரிசை காட்டி உள்ளார். அதாவது, தலைவாசல் மும்முடியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் வசிக்கும் செல்லம்மாள் என்பவரது வீட்டில் புகுந்து அவர் அணிந்து இருந்த 2¼ பவுன் தங்க சங்லியை பறித்து சென்றுள்ளார்.

இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர்தான் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து டவுசர் போட்டுக் கொண்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. அந்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஒரே நாளில் இரவு வீடு புகுந்து 2 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்