புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

பொள்ளாச்சியில் புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.;

Update: 2023-02-12 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சியில் புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.

தேர்த்திருவிழா

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ந் தேதி மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், மாலையில் திருப்பலி மற்றும் மறையுறை வேண்டுதல் நடைபெற்றது. 10-ந் தேதி திருப்பலி, மறையுறை நடந்தது.

இதைத்தொடர்ந்து ஜெபமாலை, திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. 11-ந் தேதி ஜெபமாலை, திருப்பலி வேண்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிலையில் நேற்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கூட்டு பாடல் திருப்பலி

தொடர்ந்து ஆலயத்தில் இருந்து தேர் பவனி புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தில் இருந்து பாலக்காடு ரோடு, காந்தி சிலை சந்திப்பு, மதராஸ் ஓட்டல் சந்திப்பு, மேற்கு ராஜா மில் ரோடு, எஸ்.வி.வீதி வழியாக வந்து தேர் மீண்டும் பாலக்காடு ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

இதையடுத்து கோவை போத்தனூர் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை தலைமையில் ஜெபமாலை, கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். தேர்த்திருவிழாவையொட்டி புனித லூர்து அன்னை ஆலயம் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்தது.

Tags:    

மேலும் செய்திகள்