வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்....!

கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஆனந்த குளியல் போட்டனர்.

Update: 2022-12-25 08:21 GMT

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரைப் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டு திரும்பினர். இதனால் படகுத்துறையில் நீண்ட கியூவரிசை காணப்பட்டது. விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் சுமார்3 மணி நேரம் நீண்டகியூவில் காத்திருந்தனர். இந்த கியூ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்தது.

மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்க ளான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேருராட்சி பொழுதுபோக்கு பூங்கா, போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் சன்னதி தெரு, தேரோடும் 4 ரதவீதிகள், மெயின் ரோடு பார்க்வியூபஜார், காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், திக்குறிச்சி பீச், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிப் பாலம், போன்றஅனைத்து சுற்றுலா தலங்களிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஒரே நேரத்தில் ஏராளமான பஸ், கார், வேன், ஜூப் போன்ற வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதால் கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்