தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.;
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை (28-ந் தேதி) மீலாது நபி, (29-ந் தேதி) சனிக்கிழமை, (அக்.1-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, (அக்.2-ம் தேதி) காந்தி ஜெயந்தி என 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுக்கும் பட்சத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 250 பஸ்களும், நாளை (29-ம் தேதி) 450 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,100 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், (அக்டோபர் 2-ம் தேதி) சொந்தஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.