எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் -மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு மாரத்தானை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-10 22:52 GMT

சென்னை,

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த மாரத்தானில் பங்கேற்றனர்.

மேலும் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், ரத்த தானத்தை ஊக்குவித்தல் குறித்தும் மாரத்தானில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கினார்.

தூய்மையான சென்னை

இதேபோல, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'தூய்மையான சென்னை' என்பதை வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி பயணத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார். இந்த மிதிவண்டி பயணம் கத்திப்பாரா, அண்ணாநகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் தொடங்கி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குனர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்