இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், சிலை சேதமடைந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இது தவறான தகவல் எனவும், இந்த தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் டவுன் போலீஸ் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.