இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்..!
அலுவல் பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.;
சென்னை,
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பதில்களும் இந்தியிலேயே இருக்க வேண்டும். அனைத்து அலுவலகப் பணிகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் பணி சூழல் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது மகத்தான தேசத்தின் முழுவதும் உள்ள வளமான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதையுடன் இருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.