ஐகோர்ட்டு ஊழியர் மனைவியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஐகோர்ட்டு ஊழியர் மனைவியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.;
மதுரை ஐகோர்ட்டில் அலுவலக உதவியாளராக இருந்தவர் பாலாஜி. இவர், பல்வேறு நபர்களிடம் அரசு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் வசூலித்து உள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு போலி பணி நியமன ஆணையையும் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சுமார் 31 பேரிடம் ரூ.54 லட்சத்து 75 ஆயிரத்தை வசூலித்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், பாலாஜி, அவருக்கு உதவிய சுரேஷ், ஞானசேகர், மாமனார் ராஜேந்திரன், மாமியார் பேரி, மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் பாலாஜியை கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து பாலாஜியின் மனைவி மஞ்சுளா முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.