தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள்

திருவாரூர் கமலாலய குள வடகரையில் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-09-14 00:31 IST

திருவாரூர்;

திருவாரூர் கமலாலய குள வடகரையில் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

கமலாலய குளம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே பிரமாண்டமாக கமலாலய குளம் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் உள்ளது. 5 வேலி பரப்பில் அமைந்துள்ள பிரமாண்ட குளம் திருவாரூர் நகரை அழகுப்படுத்தி வருகிறது. 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ள கமலாலய குளம் தோஷம் நீக்கும் புண்ணிய தீர்த்தமாக திகழ்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் பெருமைமிக்க கமலாலய குளத்தின் வடகரை பகுதி இடிந்தது. தொடர்ந்து மேல்கரை பகுதியும் இடிந்து விழுந்தது. கரை சீரமைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி பெய்த கனமழையால் திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறம் உள்ள கமலாலய குளத்தில் தென்கரை தடுப்பு சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது.

எச்சரிக்கை பலகை

இதனால் தென்கரையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் வல்லுனர் குழுவினர் கமலாலய குளத்தின் கரையை ஆய்வு செய்து, குளத்தின் படித்துறை உள்ள கிழக்கு கரையை தவிர அனைத்து கரைகளின் தடுப்பு சுவர்கள் பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து தென்கரையில் புதிக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, வழக்கம் போல் வாகன போக்குவரத்து சென்று வருகிறது.மேலும் தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நகர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக செல்வதற்கான கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் கரை வழியாக செல்லாமல் இருக்க துர்க்காலயா ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் எச்சரிக்கை பலகையுடன் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதைப்போல மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் கரை வழியாக செல்லாமல் தடுக்க வடக்கு வீதியில் தடை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஆனால் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக நாள்தோறும் சென்று வருகிறது. இதனால் குளக்கரையின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.எனவே கமலாலய குளத்தின் கரையில் தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளக்கரைகளில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனம் செல்லாமல் உயர்மட்ட தடுப்பு அமைத்து கரைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். 

Tags:    

மேலும் செய்திகள்