அய்யம்பேட்டை பகுதியில் கடும் பனிப்பொழிவு
அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போதைய கடும் பனிப்பொழிவால் பருவ மழை பெய்யுமா? என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போதைய கடும் பனிப்பொழிவால் பருவ மழை பெய்யுமா? என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கடும் பனிப்பொழிவு
தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து வாங்கியது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து நின்று விட்டது. இந்த மாவட்டங்களின் சில ஊர்களில் மட்டுமே சாரல் மழைபெய்தது. மற்ற ஊர்களில் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
கடந்த சில நாட்களாக அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த பனி மூட்டத்தால் பருவ மழை பெய்யுமா? என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
பருவமழை முக்கியமானதாகும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், போதிய தண்ணீர் வரத்து இன்றி மேட்டூர் அணை மூடப்பட்டு விட்ட நிலையில் பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை நம்பி தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வளர்ச்சி பருவத்திலுள்ள வாழை, கரும்பு பயிர்களும் இந்த மழை பெய்தால் தான் செழிப்பாக வளரும். மிக முக்கியமாக வருகின்ற கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க பருவ மழை மிக முக்கியமானதாகும்.
நிலத்தடி நீர் மட்டம்
இந்த பகுதியில் தற்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களை போல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பருவமழை பெய்யுமா? பொய்த்து போகுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது வட கிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்தால் தான் சம்பா, தாளடி நெற்பயிரை காப்பாற்றுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அடுத்த ஆண்டில் கோடை சாகுபடியையும், குடிநீர் தேவையையும் சமாளிக்க முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் பனி மூட்டம் விலகி இந்த பகுதிகளில் விரைவில் பருவமழை பெய்யும் என காத்திருக்கிறோம் என்றனர்.