மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த அலைகள்

மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த ராட்சத அலைகளால் மகிஷாசூரமர்த்தினி குடைவரை குன்று சூழப்பட்டு, 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.

Update: 2022-11-12 08:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அத்துடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. குறிப்பாக ராட்சத அலைகள் கடற்கரை கோவிலின் வடக்கு பக்க கடற்கரை பகுதி வரை மணற்பரப்பில் சீறி எழும்பி வந்ததால் அந்த பகுதி மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மழை நீரில் நிரம்பிய ஏரி, குளம் போல் அந்த பகுதி காட்சி அளித்தது. ராட்சத அலைகள் கரைப்பகுதி வரை 25 அடி தூரத்திற்கு சீறி பாய்ந்து வந்ததால் மீனவர் பகுதியில் கடற்கரை கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள மகிஷாசூரமர்த்தினி குடைவரை மலைக்குன்று நேற்று கடல் நீரால் சூழப்பட்டு, கடல் அரிப்பில் மெல்ல, மெல்ல பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது.

நேற்று 3 அடி உயத்திற்கு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அங்கு 10 அடி உயரத்திற்கு சீறி எழும்பும் ராட்சத அலைகள் அந்த குடை வரை குன்றின் முன் பகுதி மீது மோதி ஆர்ப்பரித்து வருகிறது.

பல்லவர் காலத்தில் இந்த குடை வரை குன்று வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அந்த குடைவரை மலைக்குன்றின் உள்ளே மகிஷாசூரமர்த்தினி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரம் இங்குள்ள மகிஷாசூரமர்த்தினிக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு செல்வதுண்டு. இன்னும் சில ஆண்டுகளில் இந்த குடை வரை குன்று கடல் நீரால் முழுவதும் மூழ்கடிக்கபட்டு விடும் என்றும், மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கடல் நீர் சூழாமல் இருக்க, பாறை கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவது போல், இந்த மகி‌ஷாசூரமர்த்தினி குடைவரை குன்றை சுற்றியும் பாறை கற்கள் கொட்டி பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய தொல்லியல் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்