மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு
தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது.
இதையொட்டி மணிமுத்தாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணை நிரம்பி இருப்பதால், வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக மறுகால் பாய்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறது.
இதே போல் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.
இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் சென்றது. எனவே தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. போலீசாரும் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள்.
நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.