பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.;

Update: 2022-11-12 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அணைகள், ஆறுகள் நிரம்பின. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை, விடிய, விடிய கொட்டி தீர்த்தது. மேலும் நேற்று விடாது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வெளியிடங்களுக்கு சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தப்படியும், குடைகளை பிடித்தப்படி சென்றனர். இதற்கிடையில் மழை தொடர்ந்து பெய்ததால் கடும் குளிர் நிலவியதால், பலர் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன. மேலும் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை ஊழியர்கள் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். பலத்த மழையின் காரணமாக மரப்பேட்டை பள்ளத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது.

மேலும் மார்க்கெட் ரோடு உள்ளிட்ட ரெயில்வே சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்ததால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கிணத்துக்கடவு, நெகமம்

கிணத்துக்கடவு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்மழையால் நேற்று கிணத்துக்கடவு வாரசந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையளவு

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சோலையார் 25, பரம்பிக்குளம் 27, ஆழியாறு 40, திருமூர்த்தி 58, வால்பாறை 55, மேல்நீராறு 56, கீழ்நீராறு 40, காடம்பாறை 8, சர்க்கார்பதி 40.20, வேட்டைக்காரன்புதூர் 42.8, மணக்கடவு 32, பெருவாரிபள்ளம் 34, அப்பர் ஆழியாறு 23, நவமலை 28, பொள்ளாச்சி 82, நெகமம் 59.5, சுல்தான்பேட்டை 49, உப்பாறு 100, கள்ளிபாளையம் 78.

Tags:    

மேலும் செய்திகள்