கறம்பக்குடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
கறம்பக்குடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கறம்பக்குடி பகுதியில் இன்று மாலை 4 மணி தொடங்கி 6 மணி வரை 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டி.இ.எல்.சி. தூய பேதுரு ஆலயத்தின் முன்பு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதேபோல் குளக்காரன் தெருவில் உள்ள சில வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சிரமம் அடைந்தனர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கறம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் இந்த மழை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகளும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.