அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியாயினர்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் (வ) கிராமத்தில் மின்னல் தாக்கி மாடு ஒன்று இறந்தது.
இதேபோல் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி மெயின் ரோடு தெருவில் மின்னல் தாக்கியதில் 2 ஆடுகளும் உயிரிழந்தன. ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கன மழை பெய்தது.
2 பேர் பலி
இதேபோல் மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 40). விவசாயியான இவர் தனது வயலில் நடவு வேலையில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு மதிய உணவு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் பெய்த மழையின் காரணமாக நடந்து செல்லும் வழியிலேயே மின்னல் தாக்கி அன்பரசன் உயிரிழந்தார்.
இதேபோல் செந்துறை அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாலைமணி(45) மின்னல் தாக்கியதில் பலியானார்.