சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்

சென்னையில் இடைவிடாமல் கொட்டும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

Update: 2023-12-04 04:31 GMT

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் கனமழை மற்றும் பலத்த காற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

மிக்ஜம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்