கன மழை எச்சரிக்கை: வைகை அணை நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு: அதிகாரி தகவல்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வைகை அணை நீாவரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா மற்றும் பாசன ஆதாரமாக திகழும் இந்த அணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்ததால் அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது அணையின் நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது.
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தேனி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே நிரம்பிய நிலையில் காணப்படும் வைகை அணைக்கு, மழையால் கூடுதல் நீர்வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீர்வரத்து, அணையில் மதகு, கரைகளை கண்காணிக்கவும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 18 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 சுழற்சி முறைகளில் தலா 6 பேர் வீதம் பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர வைகையாறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு ஆகியவற்றில் 24 மணி நேரமும் நீர்வரத்தை கண்காணிக்கவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்தார். மேலும் மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் உபரிநீர் ஆற்றில் திறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.