கனமழை எதிரொலி: வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வால்பாறையில் விடிய விடிய கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2023-07-05 02:05 GMT

கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

வால்பாறை,

வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது தீவிரம் அடைந்து இரவு பகலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மீட்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் மிதவை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் 100 போலீசார் வால்பாறையில் உஷார் நிலையில் முகாமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தீவிரம் அடை யாமல் உள்ளது. ஆனாலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது தொடரும் பட்சத்தில் சோலையாறு அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்