ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை

ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன.;

Update: 2023-06-21 19:30 GMT

ஊட்டி

ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன.

ஊட்டியில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதற்கிடையே தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வெயில் அடித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்்கெடுத்து ஓடியது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

மண் சரிவு

ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் தேங்கியது. இதன் காரணமாக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்த படி சென்றன. கனமழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையை பொருட்படுத்தாமல் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மழை அதிகமாக பெய்ய தொடங்கியவுடன், அவர்கள் தங்கும் விடுதிகளுக்கு திரும்பினர்.

ஊட்டி அருகே எம்.பாலாடாவில் இருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் செல்லும் வழியில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றினர். ஊட்டியில் குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கனமழையால் ஊட்டியில் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர்.

மின்னல் தாக்கியது

பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உப்பட்டி துணை மின் நிலையத்தை மின்னல் தாக்கியது. இதனால் மோட்டார், மின்கம்பிகள் எரிந்து நாசமானது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டியில் 27 மி.மீ., கீழ் கோத்தகிரியில் 46 மி.மீ., கோடநாடு மற்றும் சேரங்கோட்டில் 20 மி.மீ., பந்தலூரில் 38 மி.மீ. மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்