விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.;
விழுப்புரம்,
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பகலில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரமாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகு லேசான மழையாக நேற்று காலை 6 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் மதியம் 1.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது.
இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் இரவில் புழுக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.