கரூர் மாவட்டத்தில் கனமழை

கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2023-09-18 18:18 GMT

கனமழை

கரூர் மாவட்டம், தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. கிணறுகளில் போதுமான அளவு நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சம்பா நெல் நாற்றங்கால் இடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல்

நொய்யல், தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகழூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புகழிமலை, காகிதபுரம், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இந்த மழையால் வாடிய பயிர்கள் துளிர் விட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம்-தரம்பட்டி

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், வாங்கல், நெரூர், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் தரம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன.

லாலாபேட்டை

லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீடுகளில் பனிக்கட்டிகள் விழுவதை போன்று அதிக சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மழையளவு

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- அணைப்பாளையம்-4, அரவக்குறிச்சி-4, க.பரமத்தி-1.6, குளித்தலை-38, தோகைமலை-8, கிருஷ்ணராயபுரம்-26, மாயனூர்-16, பாலவிடுதி-5.2, மையிலம்பட்டி-4.3, பஞ்சப்பட்டி-22 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக 10.68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்