கபிஸ்தலம்:
கபிஸ்தலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் பெய்யும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்திருந்தனர்.இதனை போக்கும் விதமாக நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பெய்த மழை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திருப்பாலைத்துறை, திருக்கருக்காவூர், பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கும்பகோணம் வட்டார பகுதியில் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய கன மழை இரவு 10 மணி வரைநீடித்தது. இதனால் கும்பகோணம் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக மடத்து தெரு ராமசாமி கோவில் பகுதி பெரிய தெரு சக்கரபாணி கோயில் சந்திப்பு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.