கம்பம் பகுதியில் பலத்த மழை:வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்தன:விவசாயிகள் வேதனை

கம்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு நெல் நடவு செய்தனர். தற்போது நெல் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. கம்பம் அருகே சாமாண்டிபுரம் பகுதியில் அறுவடை பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பலத்த மழை பெய்தது.

வயல்களில் சாய்ந்த நெற்பயிர்கள்

இதனால் அறுவடைக்கு தயாரான வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக நெற்பயிர்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க தலைவர் ஓ.ஆர்.நாராயணன் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கியது. நெல் நடவு செய்யப்பட்டதில் இருந்து போதிய மழை பெய்யவில்லை. அணையிலும் குறைந்த அளவில் நீர் இருந்தது.

அதனை பயன்படுத்தி நெற்பயிரை காப்பாற்றி வந்தோம். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது நல்ல மகசூல் உள்ளது. அறுவடை தொடங்கிய நேரத்தில் திடீரென பெய்த கனமழையால் நெற்பயிர்கள் வேரோடு சாய்ந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்