ஈரோட்டில் கொட்டித்தீர்த்த மழைசாலைகளில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
ஈரோட்டில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.;
ஈரோட்டில் நேற்று கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோட்டில் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வருகிறது. கோடை கால வெயிலுக்கு நிகராக வெயில் சுட்டெரித்தது. காலை முதல் இரவு வரை வெப்பம் வாட்டியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலையில் திடீரென்று மழை பெய்தது. இது 2 மி.மீட்டர் அளவாக பதிவாகி இருந்தது.
நேற்று முன்தினம் மாலையிலும் திடீர் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் 20 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
கொட்டித்தீர்த்தது
நேற்று காலையில் வழக்கம்போல வெயிலின் தாக்கம் இருந்தது. மதியம் 2 மணி அளவில் திடீரென்று வானம் மேகமூட்டமாக மாறியது. வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. 2.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழைத்தூறல் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே மழை வலுத்து பெய்யத்தொடங்கியது. காற்றும் மழையும் சேர்ந்து பலத்த சத்தத்துடன் மழை கொட்டியது.
இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலையில் வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் வடிகால்களில் சாக்கடையுடன் மழை நீர் கலந்து வெளியேறியது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, சின்னமார்க்கெட், பன்னீர்செல்வம் பூங்கா, ரெயில் நிலையம், ஸ்டோனி பாலம், ஈ.வி.என். ரோடு, காந்திஜி ரோடு, வீரப்பன்சத்திரம், வ.உ.சி.பூங்கா மைதானம், மார்க்கெட் உள்பட பல பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சுமார் 30 நிமிடங்களும், சில பகுதிகளில் சுமார் 1 மணி வரையும் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் நேற்று மாலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீசியது. இரவில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. திடீர் என்று பருவநிலை மாறியது. இந்த திடீர் மழையால் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மழை அளவு
நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி-46
கவுந்தப்பாடி-41.20
எலந்தகுட்டைமேடு -44
ஈரோடு-20
கொடுமுடி-14.20
குண்டேரிபள்ளம்-10
தாளவாடி-8
பவானி-6.40
சென்னிமலை-2
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி உள்ளது.