பரமக்குடியில் 2 மணி நேரம் பலத்த மழை
பரமக்குடியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.;
பரமக்குடி
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 3.30 மணி வரை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வந்த வாகனங்கள் முன் விளக்குகளை எரிய விட்டபடி வந்தன.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நனைந்தபடியே மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு சென்றனர். தொடர்ந்து மாலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. பொன்னையாபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி கிடந்ததால் அப்பகுதி மக்கள் செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.
மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆனாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.