வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை; மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.;
கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. அதன்பின்னர் போதிய மழை பெய்யாததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடமலைக்குண்டு கிராமம் வரை மட்டுமே ஆற்றில் நீர்வரத்து காணப்பட்டது. மற்ற பகுதிகளில் ஆறு தண்ணீரின்றி காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நேற்று மதியம் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஒருமாதத்திற்கு பிறகு மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே நேற்று மாலை வெள்ளிமலை வனப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வரும் நாட்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.