சூறாவளி காற்றுடன் கனமழைமின்கம்பங்கள் சாய்ந்தன

ராசிபுரம், நாமகிரிப்பேட்டைபகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன.

Update: 2023-05-18 18:45 GMT

காற்றுடன் மழை

கோடை வெயில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றில் விளம்பர பலகைகள், மணல்கள் பறந்தன. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

காற்று வீசிய சிறிது நேரத்தில் லேசான மழை முதல் கனமான மழையும் பெய்தது. மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து மின் கலன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

மரக்கிளைகள் ஒடிந்தன

நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலை 3 மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சில இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, ஆயில்பட்டி ஆகிய பகுதிகளில் மழைபெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்