தேவதானப்பட்டியில் பலத்த மழை; வீதிகளில் ஆறாக ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது
தேவதானப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் வீதிகளில் ஆறாக ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.;
தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தேவதானப்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி பிரிவில், பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையோரம் நின்றிருந்த அரச மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
இதேபோல் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் பெய்த கனமழையால் அங்குள்ள வ.உ.சி. தெருவில் காட்டாற்று வெள்ளம் போன்று மழைநீர் ஓடியது. இதேபோல் மற்ற வீதிகளிலும் ஆறாக மழைநீர் சென்றது. இதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இரவு முழுவதும் மழை பெய்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் டி.வாடிப்பட்டி சில்லோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக சில்வார்பட்டி கிழக்கு வெளிப்பகுதியில் உள்ள சில்லோடையில் உடைப்பு ஏற்பட்டது.