போடியில் கனமழை; தடுப்பணையில் சீறிப்பாயும் தண்ணீர்
போடியில் பெய்த கனமழையால் கொட்டக்குடி பிள்ளையார் தடுப்பணையில் எழில் கொஞ்சும் வகையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.;
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. பின்னர் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்தது. நள்ளிரவு 2 மணி வரை இந்த மழை நீடித்தது. இதனால் போடி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதேபோல் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்ததால் ஓடை, ஊருணி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் சீராக சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போடி முந்தல் சாலையில், கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது போன்று தடுப்பணையில் தண்ணீர் செல்லும் எழில் கொஞ்சும் காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.