பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சை மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி 431 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update:2023-09-19 01:12 IST

தஞ்சை மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி 431 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் 431-க்கும் மேற்பட்ட இடங்களில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விஷ்ணு வடிவில் விநாயகர், சக்தியுடன் விநாயகர், சித்தி மற்றும் புத்தியுடன் விநாயகர், யானை, புலிகள், மயில், கருடன், மூச்சூறு மீது விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாநகரில் பழைய பஸ் நிலையம் எதிரே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட பொருளாளர் விநாயகம், மாநகராட்சி கவுன்சிலர் கோபால் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் தஞ்சை மாநகரில் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம், மானம்புச்சாவடி உள்ளிட்ட 82 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர வீடுகளிலும் பொதுமக்கள் களிமண்ணால் ஆன 1 அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து பூக்கள், பொரி, கடலை, சுண்டல், அவல், பழவகைகள், விளாம்பழம், நிலக்கடலை போன்ற பொருட்களை படைத்து வழிபாடு செய்தனர்.

நாளை ஊர்வலம்

தஞ்சை மாநகரில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு காந்திஜிசாலை, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக சென்று கரந்தையில் நிறைவடையும். பின்னர் வடவாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தியையொட்டி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று தஞ்சை மாவட்டத்தில் 106 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்