சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஆனைமலை அருகே சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
ஆனைமலை
ஆனைமலை அருகே சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கே.செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட தலைவர் செல்லத்துரை வரவேற்று பேசினார். இதில், மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த ஆட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் நிரந்தர பணியிடங்களை சுமார் ஆயிரத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது. எனவே நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் துரிதமாக செயல்பட குறைக்கப்பட்ட பணியிடங்களை திரும்ப வழங்க வேண்டும்.
கொரோனா பேரிடர் காலங்களில் தடுப்பு பணியை செய்து தற்போது மக்களை தேடி மருத்துவத்தில் பணியாற்று வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை தற்போதும் வழங்குவதுடன் தற்போது காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் இரண்டாம் நிலை பணியிடங்களில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்து காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.