மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மசினகுடி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-10-19 20:30 GMT

மசினகுடி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மருத்துவ கழிவுகள்

மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வருவதால் மசினகுடி பகுதியில் மக்கள் நடமாட்டம் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இந்தநிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் சிறிய அளவிலான மூட்டைகள் புதர்களுக்குள் கிடந்தது. அதனை அப்பகுதி மக்கள் பார்த்த போது உள்ளே மருத்துவக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்று உள்ளனர்.

சுகாதார சீர்கேடு

இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கழிவுகளை வீசி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இதுவரை இல்லாத வகையில் மக்கள் வசிக்கும் இடத்தில் மருத்துவக்கழிவு மூட்டைகளை மர்ம நபர்கள் வீசி சென்று உள்ளனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்