கோவளத்தில் விமான நிறுவன ஊழியரின் தலை, உடல் பாகங்கள் மீட்பு

கொலை செய்யப்பட்டு கோவளத்தில் வீசப்பட்ட விமான நிறுவன ஊழியரின் தலை, உடல் பாகங்கள் மீட்கப்பட்டது.

Update: 2023-04-09 22:02 GMT

திருப்போரூர்,

சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ஜெயந்தன் (வயது 29). விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த மாதம் 18-ந்தேதி ஜெயந்தன் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் பழவந்தாங்கல் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயந்தன் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலவாயல் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணிடம் பேசியது தெரியவந்தது.

போலீசார் புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரித்தபோது, அவர் ஜெயந்தனை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி கோவளம் அருகே வீசி எறிந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அழகியுடன் திருமணம்

ஜெயந்தன், தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொழில் செய்து வரும் அழகி பாக்கியலட்சுமியுடன் அறிமுகம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2021-ம் ஆண்டு பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார்.

உடலை வெட்டி வீசினார்

கடந்த மாதம் 18-ந்தேதி புதுக்கோட்டை சென்ற ஜெயந்தன் பாக்கியலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமி, தனது ஆண் நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்துக் கொன்றார்.

பின்னர் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றை கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து கோவளம் அருகே வீசியது தெரிந்தது. இதற்கு அவருக்கு உடந்தையாக இருந்த அங்குள்ள பூலோகநாயகி உடனுறை பூமிநாதர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

தலை, உடல் பாகங்கள் மீட்பு

அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையான விமான நிறுவன ஊழியர் ஜெயந்தனின் உடல் பாகங்களை எரித்து மூட்டையாக கட்டி பூமிநாதர் கோவில் அருகில் உள்ள குட்டையில் கல்லை கட்டி வீசியது தெரியவந்தது.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சிறுசேரி தீயணைப்பு மீட்பு குழுவினர் பூமிநாதர் கோவில் அருகில் உள்ள குட்டையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீசப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஜெயந்தனின் தலை மற்றும் உடல்பாகங்களை மீட்டனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்