கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

ஏர்வாடி அருகே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பான தகராறில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-07 20:06 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பான தகராறில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60), விவசாயி. இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்னு மகன் முருகன் என்ற குள்ள முருகன் (32). கடந்த 2021-ம் ஆண்டு தளபதிசமுத்திரம் குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பான குத்தகை எடுப்பதில், அருணாசலம் தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் அருணாசலத்தின் தரப்பினருக்கு மீன் குத்தகை ஏலம் வழங்கப்பட்டது.

மீன் குத்தகை தகராறு

தனது தரப்பினருக்கு மீன் குத்தகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முருகனுக்கு, அருணாசலத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோர்ட்டில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சியம் அளிக்க முடிவு செய்திருந்தார்.

சாட்சியம் அளிக்க தயார்

இதனால் முருகன், அருணாசலத்தை சந்தித்து தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் உறவினர்கள் மூலமும் அவரிடம் சமரசம் செய்துள்ளார். ஆனால், அதற்கு அருணாசலம் மறுத்து விட்டார். மேலும் கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்து உள்ளார்.

அந்த வழக்கு தொடர்பான விசாரணை நாங்குநேரி கோர்ட்டில் நேற்று நடைபெற இருந்தது. அதற்காக அருணாசலம், கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு அருணாசலம் அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துசெல்வி வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலையில் அருணாசலம் உயிரிழந்தார்.

5 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த பயங்கர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகன், தளபதிசமுத்திரத்தை சேர்ந்த சுடலைமுத்து குமரன் மகன் சுரேஷ் (23), பரமசிவன் மகன் அருண் (24), வள்ளியூரை சேர்ந்த ஆழ்வார் மகன் செல்வகுமார் (27), அம்பை அருகே உள்ள அடையகருங்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் மற்றொரு முருகன் (19) ஆகிய 5 பேர் கும்பலை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்