கால்வாய் சுவரில் அமர்ந்திருந்தவர் தண்ணீரில் விழுந்து சாவு
ஆரணி அருேக கால்வாய் சுவர் மீது அமர்ந்திருந்தவர் திடீரென தண்ணீரில் விழுந்து பலியானார். அவரது சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
ஆரணி அருேக கால்வாய் சுவர் மீது அமர்ந்திருந்தவர் திடீரென தண்ணீரில் விழுந்து பலியானார். அவரது சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பவித்ரா, திவ்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே குடும்ப பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் லட்சுமி தனது மகள்களுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன்பின் கூலி வேலை செய்து வந்த செல்வராஜ் அவரது தந்தையுடன் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் ராட்டினமங்கலம் கூட்ரோடு அருகே உள்ள விநாயகர் கோவிலில் பக்கத்தில் உள்ள கால்வாய் சுவர் மீது அமர்ந்திருந்தார். அந்த கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் அவர் தண்ணீரில் பிணமாக கிடந்தார்.
வழக்குப்பதிவு
நேற்று காலையில் இதனை பார்த்தவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் அங்கு வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர்.
மதுகுடித்து விட்டு அமர்ந்திருந்தபோது போதையில் விழுந்து இறந்தாரா அல்லது மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் விரக்தியில் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் கீழே அவரை தள்ளி கொலை செய்து விட்டு தப்பி விட்டனரா என்பது தெரியவில்லை.
முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் செல்வராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபால், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.