கோமா நிலையில் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்
கோமாவில் இருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று வேலூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு மகனை ஆம்புலன்சில் அழைத்து வந்து பெற்றோர் மனு அளித்தனர்.
எல்லை பாதுகாப்பு படைவீரர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம்நகரை சேர்ந்தவர் ரகுபதி. சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் மகேஷ்பாபு (வயது 42) காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். கடந்த 2003-ம் ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது அவர் மாதனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடல் நிலை ேமாசமானதால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு ஓய்வு பெற்றார்.
அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 19 ஆண்டுகளுக்கும் ேமலாக அவர் சுயநினைவின்றி கோமா நிலையில் உள்ளார். இதனிடையே ஓய்வூதிய கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க ஆதார்கார்டு அனுப்பும்படி கடிதம் வந்தது. ஆனால் அவரால் ஆதார்கார்டுக்கு விரல்ரேகை பதிய முடியாத அளவுக்கு உடல் நிலை உள்ளது.
ஆம்புலன்சில் அழைத்து வந்தனர்
இந்த நிலையில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கோமா நிலையில் உள்ள மகேஷ்பாபுவை மனு அளிக்க வைப்பதற்காக அவரை அவரது தந்தையான ஓய்வுப்பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தாயர் சுமதி ஆகியோர் அவரை ஆம்புலன்சில் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
இங்கு குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியிடம் ரகுபதி-சுமதி ஆகியோர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கோமா நிலையில்...
மகேஷ்பாபுவை கடந்த 20 ஆண்டுகளாக கோமா நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை சுமார் ரூ.72 லட்சம் செலவு செய்து விட்டோம். மகேஷ்பாபுவிற்கு ஓய்வூதியம் தாய் சுமதியின் பெயரோடு இணைந்த வங்கிக்கணக்கில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லை பாதுகாப்புப் படை அலுவலகத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆதார் அடையாள அட்டை வழங்கும்படி கேட்கிறார்கள்.
எங்களது மகனின் கைவிரல்கள் மடங்கியநிலையில் காணப்படுவதால் பலமுறை முயன்றும் ஸ்கேன் செய்து ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. குடியாத்தம் தாலுகா அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்களில் முறையிட்டும் ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. எனவே எங்களது மகனுக்கு ஆதார் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆதார் அட்டை பரிசீலனையில்...
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆதார் துறை அதிகாரிகள் அங்கு சென்று மகேஷ்பாபுவை பார்த்தனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ''மகேஷ்பாபுவின் உடல்நிலை குறித்த ஆதாரங்களுடன் ஆதார் அட்டை வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது அது பரிசீலனையில் உள்ளது. விரைவில் மகேஷ்பாபுவிற்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினர்.