சென்னையில் இருந்து திருமங்கலம் வந்தஆம்னி பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு- பயணிகளிடம் தீவிர விசாரணை

சென்னையில் இருந்து திருமங்கலம் வந்த ஆம்னி பஸ்சில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-07-09 19:58 GMT

திருமங்கலம்,

சென்னையில் இருந்து திருமங்கலம் வந்த ஆம்னி பஸ்சில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாந்தி எடுத்த வாலிபர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் முகேஷ் (வயது 26). இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் தென்காசியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வருவதற்காக நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். இந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தவுடன் முகேஷ் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதைதொடர்ந்து பஸ் திருமங்கலம் நோக்கி வந்துள்ளது.

பஸ்சில் மயங்கி விழுந்தார்

திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் பஸ் நிறுத்த பகுதிக்கு வந்தபோது, வாலிபர் முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது வாலிபர் முகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால், பயணிகளுடன் அந்த பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சில பயணிகளிடம் தீவிர விசாரணை நடந்தது. இதனால் அந்த பஸ்சில் வந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் 3 மணி நேரமாக பரிதவித்தனர். விசாரணைக்கு பின்பு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து அந்த பஸ் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்