இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுமா?

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுமா?;

Update: 2023-04-11 10:28 GMT

தளி

வானம் பொழிந்து நிலம் குளிர்ந்து சூரிய ஒளிபட்டு மண்வாசனை அடங்கிய பின்பு களையேறிய நிலத்தை கலப்பை கொண்டு உழுது சாகுபடி பணிக்கு பிள்ளையார் சுழி போடுவார் விவசாயி.சாகுபடி பக்குவப்படாத பாசனப்பரப்பை உழுது பண்படுத்தி விளைச்சலை தொடங்குவதற்கு ஆதாரமாக உள்ளது கலப்பையும் கால்நடையும்.வேப்பன் மற்றும் கருவேலான் மரத்தில் செய்யப்பட்ட கலப்பையை கொண்டு மாடுகள் ஊட்டி உழுது நிலத்தை கருவுறச் செய்வார்.மருத்துவ குணமிக்க ஏர் கலப்பையின் தயவால் விவசாயத்துக்கு எதிரான பூச்சிகள் களைகள் ஆரம்ப காலத்திலேயே கட்டுப்படுத்தப் படுகிறது.அதன்பின்பு நிலத்தில் இடுகின்ற ஒவ்வொரு விதையும் ஆரோக்கியமாக வளர்ந்து விளைச்சலை அளிக்கிறது.

இதனால் ஏர் கலப்பையும் கால்நடையும் உழவுத் தொழிலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் அங்கமாகவும் விளங்கியது.ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சி என்ற விஞ்ஞானத்தால் விவசாயத்தில் எந்திரத்தின் ஈடுபாடு தொடங்கியது. நாள் முழுக்க கலப்பை கொண்டு உழும் நிலத்தை நான்கே மணி நேரத்தில் எந்திரம் உழுது காட்டியது. அதுமட்டுமின்றி பார் ஓட்டுவது, வரப்பு கட்டுவது, நிலத்தை சமன் படுத்துவது என அனைத்து பணிகளையும் எந்திரம் கவனித்துக் கொண்டது. இதனால் ஏர்கலப்பையின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வந்தது. இயற்கையில் முறையில் கருவுற்ற நிலத்திற்கு செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் கருவூட்டப்பட்டது. இதனால் விவசாயத்தின் நண்பனான மண்புழு உள்ளிட்ட ஏராளமான நன்மை தரும் பூச்சிகள் புழுக்கள் படிப்படியாக மரணத்தை தழுவியது. உயிரினங்கள் இல்லாத மண்ணும் உயிர்ப்புத் தன்மையை இழந்து மலடாகிப்போனது.

அதில் விளைகின்ற பொருட்களும் உடலுக்கு மறைமுகமாக கேடு விளைவித்து வந்தது. நீண்ட நெடிய பயணத்திற்கு பின்பு அதை உணர்ந்த விவசாயிகள் பழையபடிக்கு இயற்கை விவசாயத்திற்கு மாறும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.அதன் முதல் கட்டமாக ஏர் கலப்பையை கொண்டு நிலத்தை உழுது பண்படுத்த பணிகளும் தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து கால்நடை கழிவுகளை கொண்டு இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விரட்டிகள் தயாரிப்பிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.அதற்கு முறையான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் இல்லாததால் இயற்கை விவசாயம் ஆங்காங்கே சிறு வட்டத்திற்குள் மட்டுமே நடைபெற்று வருகிறது.அதை விரிவுபடுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.இதனால் மண்ணும் வளம்பெரும் அதில் விளைகின்ற பொருட்களும் ஆரோக்கியமாக கிடைக்கும்.

----

Tags:    

மேலும் செய்திகள்