பத்மஸ்ரீ விருது அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : கரூரில் பாம்பு பிடி வீரர்கள் பேட்டி

அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று பாம்பு பிடித்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கரூரில் பாம்பு பிடி வீரர்கள் கூறினர்.

Update: 2023-01-26 18:30 GMT

பாம்பு பிடி வீரர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், சென்னேரி கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மாசி, வடிவேல். இவர்கள் 2 பேரும் பாம்பு பிடி வீரர்கள் ஆவர். இவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளனர். இந்தநிலையில் 2 பேரும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல். பகுதியில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடிப்பதற்கு 17 நாட்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம்பாளையத்திற்கு வந்து தங்கி உள்ளனர்.

கலெக்டர் பாராட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது பெரும் பட்டியலை அறிவித்தது. இதில் பாம்பு பிடி வீரர்களான மாசி, வடிவேல் ஆகிேயாரும் பத்மஸ்ரீ விருது பெறும் பட்டியலில் இடம் பிடித்தனர். இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் மாசி, வடிவேலுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், பத்மஸ்ரீ விருது பெற உள்ள பாம்பு பிடி வீரர்களான மாசி, வடிவேலை வரவழைத்து வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

பேட்டி

இதையடுத்து பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறித்து கரூரில் வைத்து பாம்பு பிடி வீரர் மாசி, வடிவேல் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பத்மஸ்ரீ விருது. நாட்டிற்காக மிகப்பெரிய சேவை ஆற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் நடப்பாண்டில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசு உதவி செய்ய வேண்டும்

மக்கள் வாழும் குடியிருப்புகளில் புகும் பாம்புகளை நாங்கள் சென்று பிடித்து வருகிறோம். இருளர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் 2 பேரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து உள்ளோம். விவரம் தெரிந்த வயதில் இருந்தே பாம்புகளை பிடித்து வருகிறோம். அப்பா, அம்மாவுடன் சென்று நாங்கள் பாம்புகளை பிடித்து இருக்கிறோம். நாங்கள் தலைமுறை, தலைமுறையாக கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை போன்ற அதிக விஷமுள்ள பாம்புகளை மட்டுமே பிடித்து வருகிறோம். மேலும் மிகவும் ஏழையாக உள்ள எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்