மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி

அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-09-14 05:31 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

பாரம்பரிய சிறப்புமிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

'அத்தம் பத்து ஓணம்' என்று பத்து நாட்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, தங்கள் வீட்டில் வாயிலில் அரிசி மாவினால் பெரிய கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்களால் அலங்கரித்து, குத்து விளக்கேற்றி இல்லமெல்லாம் மணம் கமழ, மக்கள் உள்ளம் எல்லாம் மகிழ ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்,

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருவோணத் திருநாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த 'ஓணம்' திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்