வேலை பார்த்த டாக்டர் வீட்டில் கைவரிசை; ரூ.9 லட்சம் நகைகள் திருடிய டிரைவர் கைது
மதுரையில் வேலை பார்த்த டாக்டர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 74). மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் செல்லூர் தத்தனேரி களத்துபொட்டல் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (46) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெகுநாட்களாக அவர் டிரைவராக இருந்ததால் அவர் மீது நாராயணன் நம்பிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகள் அடிக்கடி திருட்டுபோனது தெரியவந்தது. மேலும் ஒரே நாளில் 17 பவுன் நகைகள் மாயமானதால் நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதில், பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகைகள் திருட்டு போனதாக கூறி இருந்தார்.இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து டிரைவர் ஜெயராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, 21 பவுன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.