திருடப்பட்ட, தொலைந்துபோன 105 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
தேனி மாவட்டத்தில் திருடப்பட்ட, தொலைந்துபோன 105 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;
தேனி மாவட்டத்தில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அதுபோல், பயணங்களின் போது செல்போன்களை சிலர் தவறவிட்டும் வருகின்றனர். அவ்வாறு திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு கொடுக்கப்பட்ட புகார்களின் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த வாரம் வரை திருட்டு மற்றும் தொலைந்து போனவற்றில் 105 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.அவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது உரியவர்களிடம் செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, "போலீஸ் உட்கோட்டம் வாரியாக தேனியில் 17, போடியில் 12, உத்தமபாளையத்தில் 14, ஆண்டிப்பட்டியில் 41, பெரியகுளத்தில் 21 என மொத்தம் 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி உட்கோட்டத்தில் க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அதிக அளவில் செல்போன்கள் திருட்டு போயுள்ளன. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் செல்போன்களை திருடிய மர்ம நபர்கள் அவற்றை வெளியூர்களில் விற்பனை செய்துள்ளனர்" என்றனர்.