பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் தர்ணா

பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-25 17:14 GMT

பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வாசுகி மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு மடத்துக்குளம் தாலுகா தாந்தோணி கிராமத்தில் 12.64 ஏக்கர் நிலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் நெசவாளர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை நெசவாளர்களுக்கு வழங்காமல் வேறு நபர்களுக்கு வழங்கி விட்டனர். 264 பேரில் 218 பேருக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். உரிய நடவடிக்கை இல்லாததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பிறகு கோர்ட்டு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு 8 பேருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வாசுகி, இன்னும் 2 நாட்களில் மேலும் 10 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து படிப்படியாக வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறபட்டனர். பின்னர், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்