கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;
நெல்லை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழிலாளி கொலை
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளியான இவர் கடந்த 10-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் மனைவி மற்றும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரியின் மனைவி ஆகியோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல் ஒப்படைப்பு
நேற்று முன்தினம் சபாநாயகர் அப்பாவு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாயாண்டியின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி நேற்று காலையில் மாயாண்டியின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.