வனத்துறை தடையால் சாலை பணி பாதியில் நிறுத்தம்

வருசநாடு அருகே வனத்துறை தடையால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது;

Update: 2022-06-05 13:47 GMT

வருசநாட்டில் இருந்து வாலிப்பாறை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அந்த சாலை செல்லும் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதி்த்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வனத்துறையினருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தார்சாலை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை.

எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை மீதமுள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக தார்சாலை அமைக்கப்படாத பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வருசநாடு முதல் முருக்கோடை வரையிலான சுமார் 1 கி.மீ. தூரம் முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. மேலும் சேதமடைந்த சாலை காரணமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை தனியார் வாகனங்கள் மூலம் வருசநாடு வரை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்