விவசாயிகளுக்கு பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகள்
தோட்டக்கலை துறை மூலம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள் (மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.