விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட்

தியாகதுருகம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட் வேளாண் அதிகாரி தகவல்

Update: 2023-01-03 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பகுதியில் தற்பொழுது நவரை பருவ நெல் நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நவரை பருவ நெல் சாகுபடி வயலில் பொதுவாக ஜிங்க் நுண்ணூட்டம் பயிருக்கு போதுமான அளவில் கிடைக்காது. எனவே நடவு செய்த நெற்பயிர் பச்சைக்கட்டாமல் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். நெற்பயிரில் இக்குறைப்பாட்டை நோய்தாக்குதல் என விவசாயிகள் தவறாக எண்ணி மருந்துகளை பயன்படுத்துவர். எனவே இந்த நுண்ணூட்ட பற்றாக்குறையை ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க்சல்பேட் போடுவதன் மூலம் சரிசெய்யலாம். தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 2,420 கிலோ ஜிங்க் சல்பேட் நுண்ணுரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் வயலுக்கு ஜிப்சம் இடுவதன் மூலம் மண்ணின் பவுதீக தன்மைகள் பயிருக்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது. நெற்பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நுண்ணூட்டங்கள் எளிதில் கிடைக்கிறது. கால்சியம் நுண்ணூட்டம் பயிருக்கு கிடைப்பது குறைந்தால், மற்ற நுண்ணூட்டங்களை நெற்பயிர் மண்ணில் இருந்து எடுக்கும் அளவு குறைந்து பயிர் வளர்ச்சி குறைகிறது. எனவே கால்சியம் சத்து உள்ள ஜிப்சத்தை நெல் வயலுக்கு ஏக்கருக்கு 200 கிலோ அளிக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் பூப்பருவத்தில் உள்ள மணிலா பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம் மண்ணில் இறங்கும் விழுதுகள் அனைத்தும் பிஞ்சாக மாறி காய்கள் நன்றாக முற்றி மகசூல் அதிகரிக்கும். அதன்படி ஜிப்சம் 48 டன்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை மணிலா சாகுபடி செய்துள்ள விவாயிகள் வாங்கி பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். மேற்கண்டதகவலை தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்