கொய்யா விளைச்சல் அமோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2023-07-29 18:56 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொய்யா சாகுபடி

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத் தோப்பு. குட்டதட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், ரங்கப்பநாயக்கன்பட்டி, சுந்தரபாண்டியன், புதுப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு, பாட்டகுளம், மல்லி, பெருமாள் தேவன் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொய்யா அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொய்யாவில் மகசூல் அதிகமாக உள்ளது.

5 ஆயிரம் கிலோ விற்பனை

இந்த பகுதியில் விளையும் கொய்யாப்பழம் மிகவும் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தினமும் இங்கிருந்து சுமார் 5 ஆயிரம் கிலோ கொய்யா பழங்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

சீசன் நேரத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ வரை கொய்யாப்பழம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ சாதா கொய்யாப்பழம் ரூ.30-க்கும், சீனி கொய்யா என அழைக்கப்படும் சிகப்பு கொய்யாப்பழம் ரூ. 40-க்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். பின்னர் அவற்றை சாதா கொய்யாப்பழம் ரூ.50-க்கும், சீனி கொய்யா என அழைக்கப்படும் சிகப்பு கொய்யாப்பழம் ரூ. 60-க்கும் விற்பனை ஆகிறது.

தனி சுவை

இதுகுறித்து வியாபாரி போதிராஜா கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் விளையும் ெகாய்யா பழம் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள கொய்யாப்பழத்திற்கு தனி சுவை உண்டு.

விவசாயிகளிடம் கொய்யாப்பழத்தை வாங்கி தினமும் 50 முதல் 60 கிலோ வரை விற்பனை செய்து வருகிறேன். ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை லாபம் கிடைக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பழ பண்ணைகளில் விற்கப்படும் கொய்யா செடிகளை வெளியூர்களில் இருந்து அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்