ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2023-01-07 18:45 GMT

தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கவாத்து பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக மைதானத்தில் நேற்று நடந்தது.

இந்த காவாத்து பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறைகளை கேட்டறிந்தார்

அதனை தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

போதை பொருள் விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சி.ஜி.இ காலனி, எம்.ஜி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரடியாகச் சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த திடீர் சோதனையில் தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்