பாசனத்துக்கு தண்ணீர் இன்றி கருகும் நிலக்கடலை செடிகள்

ஆனைமலை பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-21 19:30 GMT

ஆனைமலை

ஆனைமலை பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயமும், 1,000 ஏக்கரில் பந்தல் காய்கறி விவசாயமும், 2 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல் விவசாயமும் நடைபெறுகிறது.

இதற்கிடையில் கோட்டூர், சோமந்துறை சித்தூர், காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தை, மாசி பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஆண்டு கோடை மழையை பயன்படுத்தி 750 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. அதில் நல்ல மகசூல் கிடைத்தது.

இந்த ஆண்டு தை மாதத்தில் வேளாண் துறை சார்பில் விதை கிராமம் திட்டத்தின் கீழ் 6 டன் விதை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. ஆனால் கோடை மழை சரிவர பெய்யாததால் 150 ஏக்கர் மட்டுமே நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.

தண்ணீர் தட்டுப்பாடு

இந்தநிலையில் நடவு செய்யப்பட்டு உள்ள நிலக்கடலை செடிகளின் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடை மழை சரிவர பெய்யாதது, பருவமழை தொடங்காதது ஆகிய காரணங்களால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் செடிகள் கருகும் அபாயம் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் நிலக்கடலை சாகுபடிக்கு நிலத்தை உழுதல் செலவு, ஆட்கள் கூலி, இடுபொருட்களின் விலை உள்ளிட்டவற்றுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் மழை பெய்யாததால் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. இதனால் செடிகள் கருகி வருகிறது. இந்த நஷ்டத்தை சமாளிக்க தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்